Monday 8 February 2021

 ஒரு மொழியில் சிந்தித்து மற்றொன்றில் பேசுவது


" அம்மா ஹாக்கி ஆடையை கழுவ வேண்டும் நாளைப் போட்டி இருக்கிறது" என்றான் என் மகன். "அடேய்  துவைக்க வேண்டும் என்று சொல்லடா" என்றேன். "இந்தியாவில் பொங்கல் சமயத்தில் சக்கர குச்சி கிடைக்கும் தானே" என்றான் என் மகன் "அடேய் அது கரும்பு" என்றேன் நான். தாயம் ஆடுகையில் "அம்மா இது உங்க போ" என்றான் "உங்க ஆட்டம்" என்று சொல்லணும்பா என்றேன். என் மகன் wash, sugarcane, your go என்ற ஆங்கிலச் சொற்களை அப்படியே மொழியாக்கம் செய்திருந்தான்.  அவன் பேசுவதோ தமிழில் அவன் சிந்திப்பதோ ஆங்கிலத்தில்.


சிந்திக்க ஆரம்பித்தேன். கிறிஸ்துவின் மொழியில் சிந்திக்க ஆரம்பித்தால் அவர் மொழியை தமிழாக்கம் செய்து பேச முடியுமோ? கிறிஸ்துவின் மொழி எது? 

இரு வாரத்தைகளே நினைவுக்கு  வந்தன. "என்று எழுதியிருக்கிறதே" எழுதப்பட்ட வசனமே கிறிஸ்துவின் மொழி.  பேதுரு  இதை அறிந்திருந்தார் "  ஒருவர் பேசும் கொடையைப் பெற்றிருந்தால், அவரது பேச்சு கடவுளுடைய வார்த்தைகளைப் போல் இருக்கட்டும்." 1 பேதுரு 4:11.


இயேசுவைப் போல பேச வேண்டும் என்றால் அவரைப் போல் சிந்திக்க வேண்டும். பவுல் சொல்கிறார் "  உண்மையுள்ளவைகளெவைகளோ, ஒழுக்கமுள்ளவைகளெவைகளோ, நீதியுள்ளவைகளெவைகளோ, கற்புள்ளவைகளெவைகளோ, அன்புள்ளவைகளெவைகளோ, நற்கீர்த்தியுள்ளவைகளெவைகளோ, புண்ணியம் எதுவோ, புகழ் எதுவோ அவைகளையே சிந்தித்துக் கொண்டிருங்கள்." பிலிப்பியர் 4:8. சங்கீதக்காரன், பவுல் கூறிய குணங்கள் யாவும் வேதத்திற்கே பொருந்தும் என்கிறான் "அநேகமாயிரம் பொன் வெள்ளியைப்பார்க்கிலும், நீர் விளம்பின வேதமே எனக்கு நலம்." சங்கீதம் 119:72.


வேதத்தின் வழியே சிந்தித்தும், வேதத்தையே சிந்தித்தும் வாழ்ந்தால் கிறிஸ்துவின் மொழியை இந்நூற்றாண்டின் மொழியில் மொழியாக்கம் செய்து பேசலாம் நாம். 






No comments:

Post a Comment